விக்ரம் வேதா

IMG_20180803_083557

 

அத்தியாயம் – 1

நெருக்கடியான அந்த சாலையில் ஆமையின் வேகத்தை விட பொறுமையாக நகர்ந்து கொண்டிருந்தது அந்த பேருந்து… எப்பொழுது ட்ராஃபிக் கிளியராகி வீட்டிற்குச் செல்வது என்று அமர்ந்திருந்த அனைவருமே சலிப்போடு காத்திருக்க ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு அழகிய யுவதியும் மிகவும் அவஸ்த்தையோடு அமர்ந்திருந்தாள்… அவளை அதிகமாகவே சோதித்த பேருந்து ஒருவழியாக அவள் இறங்க வேண்டிய இடத்தை நெருங்கவும் அவசரமாகப் பேருந்தில் இருந்து இறங்கியவள் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தப்படி வேகமாக நடந்தாள். மணி 6 என காட்டவும் நடையின் வேகம் மேலும் அதிகரித்தது…

“ச்சே எப்பவும் இந்த ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டு வீடு வந்து சேரவே நேரமாகிடுது… இதுல பசி வேற ரொம்பப் படுத்துது, வீட்டிலயும் ஒண்ணுமில்லை மாத கடைசி… என்ன செய்வது” என்று யோசித்தப்படியே கைப்பையில் இருந்த சாவியைத் தேடி எடுத்து கதவைத் திறந்து அதைப் பூட்ட வேண்டும் என்பதையும் மறந்து நேரே சமையலறைக்குள் சென்றாள்.

சமையலறையில் இருந்த பாத்திரத்தை எல்லாம் திறந்து பார்த்தவள் ஒரு டப்பாவில் கொஞ்சம் ரவை இருந்ததைக் கண்டு அவசரத்திற்கு இதாவது இருந்ததே என மனதில் கடவுளுக்கும் ஒரு நன்றியை செலுத்திவிட்டு உடையை மாற்றி வர தனதறைக்குள் நுழைந்தாள் வேதா என்னும் வேதவல்லி.

வேதவல்லி, நம் கதையின் நாயகி… பெற்றவர்கள் யாருமில்லாததால் சிறு வயதிலிருந்தே ஆசிரமத்தில் வளர்ந்தவள்… படிப்பில் அவளுக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு அந்த ஆசிரமத்தின் நிர்வாகி கமலாம்மாள் வேதாவை அருகிலிருந்த அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்.

நன்றாக படித்து ஸ்காலர்ஷிப் மூலம் தனது கல்லூரி படிப்பையும் முடித்து தனியார் பள்ளி ஒன்றில் வேலையும் பெற்றுவிட்டாள். அடுத்து அந்த ஆசிரமத்தின் விதிப்படி ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு வந்தாள்.

அந்த ஆசிரமத்திற்கு மாதமொருமுறை நன்கொடை கொடுக்க வரும் மூர்த்தி என்பவர் வேதாவினை பற்றி தெரிந்துக்கொண்டு அவளுக்கு ஏதாவது உதவி செய்ய எண்ணினார்.

ஏனோ அவருக்கு வேதாவைப் பார்க்கும் போதெல்லாம் தனது இறந்து போன மகள் நியாபகம் வருவதால் அவளிடம் எப்பொழுதும் அன்பாக பழகுவார். இன்று வேதாவின் நிலை அறிந்தவர் அவளைத் தன் வீட்டிலே தங்கிக் கொள்ளச் சொல்லவும்,”வேணாம் அங்கிள் நான் லேடிஸ் ஹாஸ்டல்லயே தங்கிக்கிறேன் உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்?” என்று மறுத்தாள்.

“இல்லம்மா என் மகனும் மருமகளும் தங்கியிருந்த வீடு இப்போ சும்மா இருக்கு, எப்படியும் அதை நான் வாடகைக்குத் தான் விடப் போறேன். நீயே அங்க தங்கிக்கோ, வெளியே போய் கஷ்டப்பட வேணாம். உனக்கு துணையா நாங்க இருக்கோம், எங்களுக்குத் துணையா நீ இரும்மா” என்றார்.

சிறிது நேரம் யோசித்தாள்… வேதவல்லி பயந்த சுபாவமும், கூச்ச சுபாவமும் உடையவள்… யாரிடமும் அதிகம் பழகாததால் தோழிகளும் யாருமில்லை… வெளியுலக மக்களைப் பற்றி தெரியாததால் வெளியே சென்று தனியாக கஷ்டப்படுவதை விட இவர்கள் வீட்டிலே தங்கிக் கொள்ளலாம் என முடிவுக்கு வந்தாள்.

மூர்த்தியோடு அவர் வீட்டிற்குச் சென்றவள் அவர் மனைவி சுந்தரியையும் சந்தித்தாள்… ஏற்கனவே அவர் வேதாவோடு பழகியிருந்ததால் அவரும் அவளை அங்கு தங்க சம்மதம் தெரிவித்தார்.

அது நான்கு மாடிக்கொண்ட அபார்ட்மென்ட்… கீழ் தளத்தில் மூர்த்தியின் வீடு இருந்தது. இரண்டாவது தளத்தில் வேதா தங்கப் போகும் வீடு இருந்தது. அவர்களோடு சென்று வீட்டைப் பார்த்தவள் திகைத்து நின்றாள்… காரணம் அவள் எதிர்பார்த்து வந்ததோ ஒரு சிறிய வீடு… ஆனால் அவர்கள் வீடு மூன்று படுக்கையறைக் கொண்ட பெரிய வீடு… பெரிய வீடு என்றால் வாடகையும் அதிகமாக இருக்குமே என்ன செய்வது? என்று குழப்பத்தோடு இருந்தாள்.

அவள் குழப்பத்தை பெரியர்வர்களும் கண்டு கொண்டனர். அவர்கள் கேட்கவும் மனதில் இருப்பதை மறைக்காமல் சொன்னாள்… அவர்கள் சிரித்துக் கொண்டே “உன்னிடம் யார் இப்போ வாடகை கேட்டா?” என்றனர்.

“இல்ல அங்கிள் வாடகைக் கொடுக்காம சும்மா இருக்க எனக்கு கஷ்டமா இருக்கு, நான் வாடகை கொடுத்துடுறேன் இல்லனா ஹாஸ்டல்லயே இருந்துக்கிறேன்” அவள் உறுதியாக சொல்லவும் பெரியவர்கள் சம்மதித்தனர்.

“அங்கிள் என் சம்பளம் பதினைந்தாயிரம்… நான் பத்தாயிரம் கொடுத்துடுறேன் சரியா?”

“உனக்கு ஐந்தாயிரம் செலவுக்கு போதுமா?” சுந்தரி கேட்கவும் “போதும்  ஆன்ட்டி எனக்கு என்ன செலவு இருக்கு இதுவே போதும்” என்றாள்.

சுந்தரி அதை மறுத்தார்…  “விலைவாசிலாம் ஏறி போச்சு வெறும் ஐந்தாயிரம் வச்சிட்டு உன்னால சமாளிக்க முடியாதுமா? உனக்குனு எதாவது சேர்த்து வைக்க வேணாமா? திடிர்னு எதாவது செலவு வந்தா என்ன செய்வ? நீ ஐந்தாயிரம் மட்டும் கொடு போதும் அது கூட உனக்காக தான் வாங்கிக்கிறோம்” அவரும் அதே உறுதியோடு சொல்லவும் வேதா சம்மதித்தாள்.

அந்த பெரிய வீட்டில் தனியாக தங்கப் போவதை நினைத்து பயமாக இருந்தாலும் இதை விட பாதுகாப்பான இடமும் வேறில்லை என்று தோன்றியது.

ஒரு படுக்கையறை மகனும் மருமகளும் தங்கியிருந்தது என சொல்லவும் குழந்தைகள் படுக்கையறையில் தங்கிக் கொண்டாள். இன்றோடு அந்த வீட்டிற்கு வந்து ஒரு வருடமும் முடிந்து விட்டது…  அவள் கொடுக்கும் வாடகை கூட அவர்கள் எடுத்துக் கொள்ளாமல் அவள் பெயரிலே வங்கியில் சேமித்து வருகின்றனர்… அதுவும் அவளுக்குத் தெரியாமலே…

ஒரு வருடம் கடந்திருந்தலும் அங்கு யாரிடமும் அதிகம் பழகவில்லை… ஒரு பக்கம் அவளது தயக்கம் தடுத்தாலும் அவர்களும் இவளுடன் பழகத் தயாராக இல்லை..

பள்ளியில் மாணவர்களிடம் பேசுவதோடு சரி… தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பதையே வாடிக்கையாக்கிக் கொண்டாள். வாராவாரம் சனிக்கிழமை ஆசிரமம் சென்று அங்கு தன்னாலான உதவியை செய்து வருவாள்… இன்றும் அங்கு தான் சென்று வந்தாள்.

ஒரு டீசர்ட்டும், முக்கால் பேண்ட்டும் அணிந்தபடி அறையை விட்டு வெளியே வந்தாள். தலைமுடியைத் தூக்கிக் கட்டியபடி சமையலறைக்குள் சென்று ஒரு வெங்காயத்தை நறுக்கி உப்புமா செய்ய ஆரம்பித்தாள்.

அதை செய்து முடிக்கும் தருவாயில் தான் கதவை மூடாமல் வந்தது நினைவுக்கு வர தன்னையே கடிந்து கொண்டாள்.

“அச்சோ வேதா பசி வந்தா பத்தும் பறந்து போகும்னு சொல்லுவாங்க அது உண்மை தான் அதுக்காக இப்படியா? ஏற்கனவே சென்னையில திருட்டு பயம் ஜாஸ்தி இதுல நீயே கதவை திறந்து வச்சு திருடனை உள்ளே வானு கூப்பிடுவ போலிருக்கே” தனக்குத் தானே பேசியப்படி வேகமாக வாசலை நோக்கித் திரும்பியவள் அதிர்ச்சியில் நின்றாள்…

காரணம் அங்கே ஒரு இளைஞன் அவளை முறைத்தப்படி நின்றிருந்தான்…

………………………….

அத்தியாயம் 2                                    

            சென்னை புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் முன் கறுப்பு நிற பிஎம்டபிள்யு கார் ஒன்று சீறிப்பாய்ந்து வந்து வீட்டின் வாசலில் நின்றது. தனது கூலர் கண்ணாடியைக் கழட்டியப்படி இருபத்தியேழு வயது நிரம்பிய ஹரிஷ் என்பவன் காரில் இருந்து இறங்கினான்.

                      வீட்டைச் சுற்றிப் பார்வையைச் சுழற்றியவனின் கண்களில் அதுவரை இருந்த மென்மை மறைந்து கோபம் குடிக்கொண்டது.

                      “வேலு அண்ணா” அவனின் கர்ஜனையில் அந்த வீட்டின் தோட்டக்காரன் வேலு பதறியபடி ஓடி வந்தான்.

வந்தவனிடம் தோட்டத்தைச் சுட்டிக் காட்டிய ஹரிஷ், ”அங்கே பாருங்கள் பாதி செடிகளுக்குத் தண்ணீரே ஊற்றாமல் எப்படி வாடிப் போயிருக்கு… இந்த பக்கம் திறந்த பைப்பை மூடாமல் தண்ணீர் வீணாப் போயிட்டு இருக்கு. அம்மாவுக்கு இதுலாம் பிடிக்காதுனு தெரியும் தான… இல்ல அம்மா இனி வெளிய வரவே மாட்டாங்கனு முடிவு பண்ணிட்டிங்களா…?” என்றான்..

தனது அன்னைக்குப் பிடிக்காததை செய்து விட்டானே என்ற ஆதங்கத்தில் கத்தினான்.

“மன்னிச்சிடுங்கத் தம்பி நான் ரெண்டு நாளா வேலைக்கு வரவில்லை, சமையல்காரம்மாவுக்கும் வாட்ச்மேனுக்கும் அவர்கள் வேலையை செய்யவே நேரம் சரியா இருக்கு… அதனால இதை கவனிக்க யாரும் இல்லை தம்பி…  நான் இன்னைக்கு தான் தம்பி வந்தேன்… செடிக்குத் தண்ணீர் பாய்ச்ச தான் பைப்பைத் திறந்தேன், அதுக்குள்ள வேற வேலையா இப்ப தான் உள்ளே போனேன்…” எங்கே தன்னை தனது எஜமானர் தவறாக கருதி விடுவாரோ என்ற பயத்தில் நீண்ட விளக்கம் கொடுத்தான்.

“நீங்க இல்லாதப்போ பார்த்துக்க, உங்களோட உதவிக்குனு யாரையாவது வச்சிக்க வேண்டியது தானே எதுக்கு தனியாக கஷ்டப்படுறீங்க? உங்களுக்கு அந்த ரைட்ஸ் அம்மா கொடுத்திருக்காங்க தானே… இப்படி வாடி போயிருக்கச் செடியைப் பார்த்தால் அம்மா எவ்வளவு வருத்தப்படுவாங்க?”  என்றான்.

“ஆள் சொல்லிருக்கேன் தம்பி… ஒண்ணாந்த்தேதியில் இருந்து வர்றேன்னு சொல்லிருக்காங்க… அதுவரைக்கும் நானே சமாளிச்சிடுறேன் தம்பி” என்றான் பணிவோடு.

அப்பொழுது தான் வேலு இரண்டு நாட்களாக வேலைக்கு வரவில்லை என்று சொன்னது ஞாபகம் வரவும்,” ஏன் இரண்டு நாட்களாக வேலைக்கு வரவில்லை உடம்பு சரி இல்லையா” அக்கறையோடு கேட்கவும் வேலு சிரித்துக் கொண்டே “இல்லைத் தம்பி என் பெரிய பொண்ணு கனகா பெரிய மனுஷியாகிட்டாள்… அவளுக்கு சடங்கு செய்யணும் அதான் லீவ் போட்டிருந்தேன்” என்றான்..

தனது பர்ஸைத் திறந்து சில ஐநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து வேலுவிடம் நீட்டிய ஹரிஷ் “இந்தாங்க வீட்டுக்குப் போகும் போது கனகாவுக்கு புது ட்ரெஸ் எடுத்திட்டு போங்க..” எனவும், வேலு தயக்கத்தோடு “வேணாம் தம்பி அம்மா ஏற்கனவே நிறைய கொடுத்துட்டாங்க” என்றான்..

“இதை நான் உங்களுக்காக கொடுக்கல கனகாவுக்கு கொடுக்கிறேன்… வாங்கிக்கோங்க” என வேலுவின் கையில் திணித்தான்.

“அப்புறம் கனகாவ கேட்டதா சொல்லுங்க… பார்த்து ரொம்ப நாளாச்சு, ஸ்கூல் லீவ் விடும் போது வீட்டுக்கு வந்துட்டு போக சொல்லுங்க, அம்மாவுக்கும் கொஞ்சம் மாறுதல் கிடைக்கும்.” என்றான். சரி என தலையாட்டி விட்டு வேலு தனது வேலையை கவனிக்கச் செல்லவும் மீண்டும் பார்வையைத் தோட்டத்தின் புறம் திருப்பினான்.

தனது அன்னையின் மேற்பார்வையில் இருக்கும் வரை எவ்வளவு அழகோடும் பொலிவோடும் காட்சியளித்தத் தோட்டம் இன்று அதன் பொலிவை இழந்து நின்றது… என்ன தான் வேலு தினமும் பராமரிக்கும் வேலையை செய்து வந்தாலும் அதன் நிலை மாறவில்லை… பாவம் அவனும் என்ன செய்வான் இது நாள் வரை தனது அன்னை சொன்னதை மட்டுமே கிளிப்பிள்ளைப் போல் செய்து வந்தவனுக்கு இன்று தனியாக பராமரிக்கத் தெரியவில்லை.

அந்த வீட்டின் வெளிக் கேட்டில் இருந்து வீடு வரை ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும்… அந்த இடம் முழுவதும் அழகுச் செடிகள், பூச்செடிகள், அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் என நேர்த்தியோடு வைத்திருந்தார்.. அவனின் அன்னை சாரதா தேவி… வீட்டின் பின்புறமும் தென்னை, வாழை, மாமரம் என பலவகை மரங்கள், காய்கறிச் செடிகள், கீரை வகைகள் என சிறு இடத்தைக் கூட வீணாக்காமல் பயன்படுத்திருந்தார்… சிறுச் செடியைக் கூட வாட விடாமல் தினமும் தண்ணீர் பாய்ச்சியதாலும், தேவையான இயற்கை உரமிட்டு வந்ததாலும் அந்த இடம் முழுவதும் செழிப்போடு காட்சியளித்தது… அதிக மரமும் செடியும் இருந்தாலும் பார்ப்பதற்கு காடு போல இல்லாமல் அழகிய தோட்டமாக காட்சியளித்தது… சென்னையில் இப்படி ஒரு வீடா என் காண்பவர்கள் வியக்கும் வண்ணம் தனது வீட்டை பராமரித்திருந்தார் சாரதா தேவி… ஆனால் இன்று அந்த தோட்டம் தனது அன்னையை போலவே பொலிவிழந்து இருப்பதை கண்டவனின் கண்ணில் நீர் சுரக்கவும் அதை யாருக்கும் தெரியா வண்ணம் கூலரை அணிந்து மறைத்தான்.

தனது தாயின் நினைவு வரவும் வேகமாக உள்ளே வந்து அந்த பெரிய ஹாலைக் கடந்து நேரே தனது தாயின் அறைக்குள் நுழைந்தான்… அவன் எதிர்பார்த்தது போலவே அங்கு அவனது தாய் அந்த அறையின் சுவற்றில் மாட்டியிருந்த தனது தந்தையின் பெரியப் புகைப்படத்திற்கு முன் சோர்வோடு சாய்ந்து அமர்ந்திருந்தவரின் கையில் தனது அண்ணனின் புகைப்படம் இருந்ததை கண்டான்… அவரின் நிலையை கண்ட ஹரிஷ் மனதிற்குள்ளேயே கண்ணீர் வடித்தான்.

ஒரு மகாராணியைப் போல் கம்பீரத்தோடு வீட்டில் வலம் வந்த தனது அன்னை இன்று இந்த அறையே கதியென்று இருக்கும் நிலையை எண்ணி வருந்தியவன் ஓடிச் சென்று அவரை அணைத்துக் கொண்டான்… தனது மகனின் ஸ்பரிசத்தை உணர்ந்த சாரதா மகனின் தலையை கோதியப்படி அவன் முகத்தை நிமிர்த்தினார்.

“இன்னும் எத்தனை நாளைக்கு மாம் இப்படி ரூம்குள்ளேயே அடைஞ்சு இருப்பிங்க… உங்களை இந்த நிலைமைல பார்க்க முடியாம தான் அண்ணன் இந்த நாட்டை விட்டேப் போயிட்டான் நீங்க இப்படியே இருந்தால் நானும் அவனை மாதிரியே போயிடுவேன்” எனவும் சாரதா பதறினார்.

“வேணாம் கண்ணா நீயும் என்னை விட்டு போயிடாதடா”

“அப்படினா பழைய சாரதா தேவியா இந்த ரூமை விட்டு வெளியே வாங்க… அப்பாவுக்கு அப்புறம் நீங்க தான எங்களுக்கு எல்லாம்… நீங்களே இப்படி இருந்தால் நாங்க என்ன செய்யறது… ஏற்கனவே அவன் வேற தன்னால தான் எல்லாம்னு குற்ற உணர்ச்சில இருக்கான்… இதுல நீங்களும் இப்படியே இருந்தால் அவன் இந்தியா பக்கமே வர மட்டான்… அப்புறம் நான் தான் கஷ்டப்படனும்… “அதுவரை அவன் பேசியதை அமைதியாக கேட்டவர் அவனது கடைசி வரியில் குழம்பினார்.

“உனக்கு என்னடா கஷ்டம்?”

“என்னது… எனக்கு என்ன கஷ்டமா?? பின்ன என்ன மாம் எவ்வளவு ஜாலியா சுத்திட்டு இருந்தேன் எல்லா பொறுப்பையும் இப்போ என் தலையில கட்டிட்டு அவன் போய்ட்டான்… சின்னப்பிள்ளை எவ்வளவு தாங்குவான்னு யோசிக்க வேணாம்…. எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே இவன் ரொம்ப நல்லவனு நினைச்சிட்டான் போல…” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஹரிஷ் சொல்லவும் சாரதா புன்னகைத்தார்… அந்த புன்னகை வெறும் உதட்டளவில் தான் என்பதை ஹரிஷும் உணர்ந்து கொண்டான்.

என்னதான் பெரிய மகன் வெளிநாட்டிற்கேச் சென்றிருந்தாலும் தனது தம்பியிடம் மொத்தப் பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு சும்மா இருக்க மாட்டான் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்… அது போலவே சாரதாவின் பெரிய மகனும் ஆன்லைன் மூலம் அனைத்தையும் கவனித்துக் கொண்டு ஹரிஷிற்கு உதவியாக இருந்தான்.

யோசனையோடு அமர்ந்திருந்த சாரதாவின் முன் கையசைத்த ஹரிஷ், “மாம் போதும் அண்ணன பத்தியே நினைச்சிட்டு இருப்பிங்க உங்க செல்லக் கண்ணனையும் கொஞ்சம் கவனியுங்க ரொம்ப நேரமா பசியோடு இருக்கேன்” என்றான்… மகனின் பசியை உணர்ந்தவர் அவனை அழைத்துக் கொண்டு டைனிங் ஹாலை நோக்கிச் சென்றார்… அவர் பின்னோடு சென்றவனின் மனதில் எப்படியாவது தன் அன்னையை பழையப்படி மாற்ற வேண்டும், தனது அண்ணனும் நடந்ததை மறந்து வீட்டிற்கு வர வேண்டும் என்பது மட்டுமே இருந்தது…

…………………..

கதவைப் பூட்டாமல் வந்தது நினைவு வரவும் வேகமாக அடுப்பை அணைத்து விட்டு வாசலை நோக்கித் திரும்பிய வேதா அங்கே சமையலறை வாயிலில் இளைஞன் ஒருவன் வெறும் பனியனும் ஷார்ட்ஷும் அணிந்து கொண்டு கையில் தண்ணீர் பாட்டிலோடு தன்னை முறைத்தப்படி நிற்பதைக் கண்டு அதிர்ந்து நின்றாள்…

சிறிது நேரத்தில் அதிர்ச்சியில் இருந்து மீண்டவள் தன் பயத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு,” திருடன்… திருடன்…” என கத்தினாள்.

கடவுளே இந்த அபார்ட்மென்ட்ல கொலையே நடந்தாலும் கண்டுக்க மாட்டாங்களே… இப்போ என்ன செய்யறது இவன்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது, தப்பிக்க எதாவது வழி இருக்கா என யோசித்தப்படி கத்திக் கொண்டு இருந்தாள்…

ஒரே எட்டில் அவளை நெருங்கியவனோ தனது வலிய கரத்தால் அவளது வாயை மூடினான். அவன் அழுத்தி மூடியதில் வேதாவிற்கு வலியில் கண்ணீர் வரவும் அவள் கண்களில் தெரிந்த பயத்தையும் வலியையும் கண்டவன் என்ன நினைத்தானோ “சத்தம் போடக் கூடாது” என எச்சரித்தப்படி கையை மெதுவாக எடுத்தான்..

“என்னை விட்டுடு எங்கிட்ட பணம் நகைனு எதுவுமே இல்லை… இந்த ஒரு செயின் மட்டும் தான் இருக்கு என கழுத்தில் இருந்த செயினை அவனிடம் காட்டியவள் இது வேணும்னாலும் கொடுத்துடுறேன். என்னை எதுவும் பண்ணிடாத… ப்ளீஸ்… “என கெஞ்சினாள்.

பாவம் அவளும் எத்தனை செய்திகளில் கேட்டிருப்பாள்… வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து வீட்டில் இருந்த நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர் என்று… தனக்கும் அதுப்போல ஏதாவது நடந்து விடுமோ என்ற பயத்தில் அவனிடம் கெஞ்சினாள்… ஆனால் அவனோ அவளை எரித்து விடுவது போல பார்த்தான்…

“ஏய் என்ன நினைச்சிட்டு இருக்க… என்னைப் பார்த்தா திருடன் மாதிரியா தெரியுது… ம்ம்… சொல்லு…” என கர்ஜித்தான்.

அவனது கர்ஜனையில் மிரண்ட வேதா பயத்தோடு அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள் என்ன நினைத்தாளோ இல்லை என தலையசைத்தாள்.

அவளது கண்களில் தெரிந்த பயத்தில் தனது கோபத்தைக் குறைத்தவன்… பொறுமையாக அவளிடம் “யார் நீ, இங்கே என்ன செய்கிறாய்?” என விசாரித்தான்.

“நா…ன்… நா…ன்…” என முதலில் திணறியவள் அவன் திருடன் இல்லை என்ற தைரியத்தில்,” நீங்க யாரு இங்கே என்ன பண்றீங்க… இது மூர்த்தி அங்கிள் வீடு, நான் ஒரு வருஷமா இங்கே தான் தங்கியிருக்கேன்…” என பயமில்லாமல் தனது விசாரணையைத் தொடர்ந்தாள்…

இவ்வளவு நேரம் பயத்தில் நடுங்கியவள் இப்பொழுது தைரியமாக பேசுவதற்கான காரணத்தை அறிந்தவன் அவளை எண்ணி வியந்தான்… முதலில் தான் திருடன் இல்லை என்று அவள் சொன்ன போதுக் கூட ஏதோ பயத்தில் இல்லை என்று சொல்லுகிறாள் என்றே நினைத்தான்.. ஆனால் இப்பொழுது அவள் தைரியமாக பேசுவதை கண்டு தன்னை எப்படி எளிதில் நம்புகிறாள், என்றே வியந்தான்…

ஆனால் வெளியே அதே முறைப்போடு,” நானும் இங்கே தான் தங்கப் போகிறேன்” என பழையப்படி அவளை அதிர வைத்தான்…

வேதா அதிர்ந்தாலும் அதிர்ச்சியை ஓரம் கட்டி வைத்துவிட்டு, “ஹலோ நீங்க எப்படி இங்கே தங்க முடியும்? ஏற்கனவே இந்த வீட்டுல நான் தங்கியிருக்கேன்” என சொல்லும் போதே மூர்த்தி நேற்று போனில் அவளிடம் பேசியது நினைவு வந்தது.

“எனக்கு தெரிஞ்சவங்க இந்த வீட்டுல கொஞ்ச நாள் தங்குவாங்க, நீ அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியுமா” என தயக்கத்தோடு கேட்கவும், “என்கிட்ட உங்களுக்கு எதுக்கு தயக்கம் அங்கிள் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை சம்மதம்” என்றாள்.

அப்படினா இவனைப் பத்தி தான் அங்கிள் சொல்லியிருப்பாரா? நான் பொண்ணா இருக்கும்னு நினைச்சேன். இவனோட எப்படி தங்க முடியும்? என குழம்பினாள்.

புதியவனோ அவளின் முக மாறுதல்களையே கவனித்துக் கொண்டிருந்தான்.

அவன் தன்னை கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்பதை உணர்ந்த வேதா பார்வையை மாற்றினாள்.

கடவுளே இவன் முன்னாடி இந்த ட்ரஸ்லயா நிக்கனும், உடனே மாத்தனும் என நகர முயன்றவளை “எங்கே போகிறாய்?” என அவன் குரல் தடுத்தது.

ஏன் எங்கே போனாலும் சார் கிட்ட சொல்லிட்டு தான் போகணுமோ? என மனதில் நினைத்தாலும் ஏனோ அவனிடம் எடுத்தெறிந்து பேச மனம் வராததால் “நான் அங்கிள் கிட்ட பேசணும் “என்று திரும்பிப் பாராமலே சொல்லிவிட்டுச் சென்றாள்.

புடவை ஒன்றை கட்டிக் கொண்டு வெளியே வரவும், அவனும் எதிர் அறையில் இருந்து தனது உடையை மாற்றி விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.

ஹாலிற்கு வந்தவள் தனது கைப்பேசியில் மூர்த்தியை அழைக்கவும், அவரோ வெளியில் இருப்பதாகவும் அரை மணி நேரத்தில் வருவதாகவும் கூறினார்.

அவனிடம் விஷயத்தை சொல்லிவிட்டு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தாள். “இவ்வளவு நேரம் என்னை மறந்துட்டியே “என வேதாவின் வயிறு சத்தம் போடவும் சரி அங்கிள் வர நேரமாகுமே அதுக்குள்ளே சாப்பிட்டுடலாம் என எழுந்தாள்.

அதே நேரம் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தவன், தான் உட்கார்ந்ததால் அவள் எழுந்து செல்கிறாள் என எண்ணியவன், அவள் தன்னை அவமானப்படுத்தியதாக நினைத்து வேதாவின் மீது ஆத்திரத்தோடு இருந்தான். ஆனால் சிறிது நேரத்தில் அவள் கையில் தட்டை எடுத்துக் கொண்டு வந்து பழைய இடத்திலே அமரவும் வேதாவின் மீதான அவனின் எண்ணம் மாறியது…

அவன் இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் பசியில் வேகமாக சாப்பிடவும் அவன் எழுந்து அவன் அறைக்குச் சென்று விட்டான்…

மூர்த்தி சொன்ன நேரத்திற்கு வரவும் இருவரும் ஹாலுக்கு வந்தனர்…வேதா பேசும் முன்பே புதியவனோ கோபமாக பேச ஆரம்பித்தான்…

“இங்கே ஏற்கனவே ஒரு பொண்ணு தங்கியிருக்கானு எங்கிட்ட ஏன் அங்கிள் சொல்லவே இல்லை… நான் ஹோட்டல்லையேத் தங்கிக்கிறேன்…” என்றான்…

“ஆதி நான் சொல்றதைக் கேளு கண்ணா… நீ உன் ரூம்ல இரு நான் வேதாகிட்ட பேசிட்டு வந்துடுறேன்…” மூர்த்தி சொல்லவும் மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக உள்ளே சென்றான்.

திரும்பி வேதாவைப் பார்த்தவர் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தார்… அவர் அருகில் அமர்ந்த வேதா, “நேற்று நீங்கள் சொல்லும் போது யாரோ பெண்ணாக இருக்கும்னு நினைச்சேன் அங்கிள்… நான் எப்படி இவர் கூட தங்க முடியும்… ஹாஸ்டலுக்குப் போயிடுறேன் அங்கிள்”என்றாள்…

                “எதுக்குமா நீ ஹாஸ்டல் போகணும்னு சொல்லுற, ஆதி ரொம்ப நல்ல பையன்மா, உனக்கு எந்த பிரச்சினையும் வராது… நீ இங்கேயே இரும்மா இது தான் உனக்கு பாதுகாப்பு… ஆதி நினைச்சு நீ பயப்படாதே, அவன் என் ஃப்ரெண்டோட பையன்… நான் தூக்கி வளர்த்தப் பையன்.. அவனுக்கு நான் உத்திரவாதம் கொடுக்கிறேன்… நீ இங்கே இருந்து போக வேணாம் வேதா…”

               “நீங்க இவ்வளவு தூரம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அங்கிள்… நீங்க ஒருத்தருக்கு சப்போர்ட் பண்றீங்கனா நிச்சயம் அவரு நல்லவரா தான் இருக்கணும்… ஆனால் எனக்கு பயம் அவரை நினைத்து இல்லை அங்கிள்… ஒரே வீட்டுல எப்படி தங்கிறது, பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க, அதுக்காக தான் யோசிக்கிறேன்”…

“இவன் என்ன நினைப்பான்,அவன் என்ன நினைப்பான் நினைச்சே எல்லாரும் வாழுறோம், ஆனால் உண்மையில் ஒருத்தனும் நம்மள பத்தி நினைக்கிறது இல்லை… எல்லோரும் அவர்கள் வேலையை பார்க்கவே நேரம் இல்லாம சுத்திட்டு இருக்காங்க, இதுல யாரு நம்மள கவனிக்க போறாங்க.. நீ ஒரு தப்பும் செய்யலையே அப்புறம் ஏன் மத்தவங்களைப் பற்றி நாம யோசிக்கனும்… எனக்கு உங்க ரெண்டு பேர் பத்தியும் நல்லா தெரியும்மா… நீ உன் ரூம்ல இருக்கப் போற, ஆதி அவன் ரூம்ல இருக்கப் போறான்… யாருக்கும் எந்தத் தொல்லையும் இருக்காது” என்றார்.

வேதாவை நன்கு அறிந்தவர், தனியாகச் சென்றால் கஷ்டப்படுவாள் என்று தெரிந்ததால் அவள் இங்கு இருந்து செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்… அதே சமயம் ஆதியின் நிலையும் அறிந்தவர் என்பதால் அவனையும் தனியாக விட மனம் வரவில்லை… அதனால் எப்படியாவது அவள் சம்மதிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார்…

மூர்த்தியின் முயற்சிக்குப் பலன் கிடைக்குமா ?

வேதா சம்மதிப்பாளா?

ஆதியின் முடிவு என்னவாக இருக்கும்?

               அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

Advertisements